குறும்படம் பார்க்க படத்திலே சுட்டவும்
நடிப்பு:சுமதி ரூபன்,சுரேஷ்குமார்.
திரைக்கதை:சுமதி
ஒளிப்பதிவு,இயக்கம்:ரூபன்
நாடு:கனடா
மனுசி குறும்படம் எனது பார்வையில்
திருமதி.சந்திரவதனா செல்வகுமாரன்.
குடும்பம் என்றால் என்ன?
மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா?
குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா?
நடைமுறையில் என்னவோ இந்தளவு மதிப்பு பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லையே! பெண் இல்லாமல் ஒரு ஆணால் தனித்து வாழ முடியாது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், பெண்ணை விடத் தான் உசத்தி என்று எண்ணும் எண்ணம் இன்னும் ஆண்களை விட்டு அகலவேயில்லை. அதே நேரம் பல பெண்களின் மனதில் இருந்தும், தாங்கள் பெண்கள்;, அதனால் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமும் விட்டுப் போகவில்லை.
நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆண் ஆதிக்க அடக்கு முறையும், பெண் அடிமைத்தனமும் இன்று சற்றே தளர்ந்து பெண்கள் ஓரளவுக்கேனும் விழிப்புணர்வுடன் வாழத் தொடங்கியிருந்தாலும் இன்னும் பெரும்பான்மையான பெண்கள் அடிமைத் தளைகளை அறுத்தெறியத் தெரியாமல் இறுகப் பற்றியபடியே இருக்கிறார்கள்.
சமையல், சாப்பாடு, வீட்டுவேலை, பணிவிடை... என்று மாய்ந்து கொண்டிருந்த பெண்களின் மனதில், இதற்குத்தான் இவர்கள் லாயக்கு என்ற பிரமை காலங்காலமாக ஆண்களால் ஊட்டப் பட்டு, காலப்போக்கில் அதுவே சமூகத்தின் மத்தியில் உறுதி செய்யப்பட்டும் விட்டது. எத்தனையோ ஆண்கள், இன்னும் கூட அடுப்படிக்கும் படுக்கைக்கும் மட்டுமே பெண்கள் லாயக்கானவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதே நேரம் கணிசமான தொகையிலான ஆண்கள் தாம் இதுவரை காலமும் பெண்களை எவ்வளவு தூரம் அடிமைப் படுத்தி வாழ்ந்திருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கியும் இருக்கிறார்கள். ஆனாலும் பெண்களை அடிமைப் படுத்தி வாழும் போது சுகித்த அந்த சுகபோக வாழ்க்கையை விட்டு வெளியில் வர அவர்களுக்கும் இன்னும் முழுமனதான இஸ்டமில்லை.
ஆனாலும் இதற்கும் மேலால் எம்மால் முடியும் என்று ஓரளவு பெண்களாவது இன்று ஓரளவுக்கேனும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தமது காலில் தாம் நிற்க வேண்டுமென்று எண்ணத் தொடங்கியுள்ளார்கள். பொருளாதார ரீதியாக தம்மைத் தாம் பலப் படுத்திக் கொள்ள வேண்டுமென்ற உத்வேகம் கொண்டுள்ளார்கள். அதன் பயனாக வேலை செய்து பணம் சம்பாதித்து வீட்டுச் செலவில் தாமும் பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கோடு வீட்டை விட்;டு சற்றே வெளி உலகத்துக்கும் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.
இருந்தும் என்ன..? எப்படித்தான் வெளியில் வந்தாலும், எந்தளவுதான் சம்பாதித்தாலும் அவர்களால் தமக்கென்று காலங்காலமாக நியமித்து வைக்கப்பட்ட சமையல், சாப்பாடு, வீட்டுவேலை, பணிவிடை.. போன்றவற்றிலிருந்து முழுமையான விடுதலையைப் பெற முடியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இதுவரை காலமான சில பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முழுமையான விடுதலை பெற்று விட்டதான ஒரு மாயைத் தோறறம் வெளி உலகில் ஏற்பட்டிருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்து பார்க்கும் போது பெண்ணானவள் இன்னும் அதிகப் படியான சுமைகளுடன்; மிகுந்ததொரு சிக்கலான நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளாள்.
அப்படியானதொரு சிக்கலில் மாட்டுப் பட்ட பெண்ணின் கதைதான் மனுசி. ஒரு வார்த்தை பேசாத மனுசி புலம் பெயர்ந்த எமது தமிழ்ச்சமூகத்தின் வெளி வேசங்களைக் களைந்து விட்டு உள் நிகழ்வுகளைக் காட்டியிருக்கிறாள்.
அவள் வேலை முடிந்து வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வருகிறாள். முகத்தில் தெரிந்த களைப்பும், கொட்டாவியும், தளர் நடையும் அவள் முழுநேர வேலை செய்து விட்டு மிகுந்த அலுப்போடு வருவதையே காட்டுகின்றன.
வீட்டுக்குள் நுழையும் போது அங்கு அவளது கணவன் சோபாவில் இருந்து தொலைக்காட்சியில் பாட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் தனது எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு வந்திருந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறானா? அல்லது வேலைக்கே போகாமல் இருந்து பார்க்கிறானா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. எதுவாயினும் ஒரு கணவன் வேலை முடிந்து வரும் போது மனைவி இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என்றுதானே ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். அதே போல ஒரு மனைவி வேலை முடிந்து வரும் போது வீட்டிலிருக்கும் கணவன் செய்ய வேண்டாமா? அவளது கணவன் செய்யவில்லை..
அவன் வேலைக்குப் போய்விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றால் அவன் மனதில் நான் எட்டு மணித்தியால வேலை செய்து உலகசாதனை புரிந்திருக்கிறேன் என்ற எண்ணம் இருக்கலாம். இல்லையென்றால் இவள்தானே என்ற அலட்சியம் இருக்கலாம். எதுவாயினும் மனிதனுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய நேசம் இல்லை. வந்தவளை சிரித்து வரவேற்கக் கூடிய இதம் இல்லை.
எப்படி வேலை? என்று கேட்கக் கூடிய அன்பு கலந்த அக்கறை இல்லை. களைப்போடு வருகிறாளே என்ற நினைப்போடு தேநீர் ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும் பிரியம் இல்லை. இருவரும் ஒருவரில் பாதி என்றும், வரும் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டு இல்லறம் காணுவதாகவும் அக்கினி முன் சத்தியம் செய்து ஆரார்த்தி எடுத்து மாலை மாற்றிக் கொண்ட அந்த இணைவுக்கு அர்த்தமும் இல்லை.
களைப்பு இன்னும் அவளோடு ஒட்டியிருக்க, அவள் நேரே சமையலறைக்குச் சென்று, கொண்டு வந்த பொருட்களை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டு, முகம் கழுவி வந்து சமையலை ஆரம்பிக்கும் போது கூட ஒடிச்சென்று ஒத்தாசை செய்ய வேண்டுமென்ற எண்ணம் அந்தக் கணவனிடம் இல்லை. இறைச்சியை வெட்டும் போதும், தொடரும் வேலைகளின் போதும் வரமாட்டானா? என்ற ஏக்கமும் ஆதங்கமும் அதனாலான கோபத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத இயலாமையும் ஒன்று சேர அவள் திரும்பித் திரும்பி அவன் பக்கம் பார்ப்பது யதார்த்தம். ஒவ்வொரு அசைவுகளுமே மிகுந்த யதார்த்தத்தோடு படமாக்கப் பட்டுள்ளன.
அவள் வலிக்கும் நாரியை அழுத்திக் கொண்டும், உளையும் கால்களை இழுத்துக் கொண்டும், சமையல் செய்கிறாள். இவன் உணர்ச்சி எதுவும் அற்ற மரக்கட்டை போலப் பேசாமலிருந்து தொலைக்காட்சி பார்க்கிறான்.
இந்தளவு ஒருத்தி வலிக்கும் நாரியை அழுத்திக் கொண்டும், உளையும் கால்களை இழுத்துக் கொண்டும், அலுப்போடு மாயும் போது சும்மா இருந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு சாப்பாட்டுக்காகக் காத்திருப்பவனின் மனதே எவ்வளவு சோம்பேறியாக இருக்கும். சேர்ந்து சமைத்தானேயானால் சமையலும் வேளைக்கு முடியும். இவனுக்கும் அந்தப் பொழுது வேறு மாதிரிக் கழியும். அதை விடுத்து சும்மா சோபாவுக்குள் சுருண்டிருந்து கொண்டு படம் பார்க்கும் போது "என்னடா இவள் இன்னும் சமையலை முடிக்கேல்லையோ" என்ற எரிச்சல்தான் எழும். இப்படி வெட்டிப்பொழுது போக்கும் கணவன்மார்கள் எம் மத்தியில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பொழுதில் தாம் ஒரு முற்றிய மனநோயாளி போல அமர்ந்திருப்பதை உணர்ந்து கொள்வார்கள்.
சோபாவுக்குள் சுருண்டிருந்தவன் ஒரு குட்டித்தூக்கமும் போட்டு விடுவான். அவள் இறைச்சியை அடித்து வெட்டும் போது அந்தக் குட்டித்தூக்கம் கலைந்து.. அவன் முகம் கோணுவதைப் பார்த்தால் அவள் ஏதோ தவறு செய்கிறாள் போன்றதொரு பாவனையை ஏற்படுத்துகிறது. சாப்பிடப் போவது இருவரும். ஆனாலும் களைத்து வந்த அவள் சமைக்கும் போது இவனால் உதவ முடியவில்லை. அவள் வெட்டுவதினால் எழும் சத்தம் மட்டும் இவனை உபத்திரப் படுத்துவது போலப் பாவனை. இப்படித்தான் பெரும்பான்மையான ஆண்கள். பாவனைப் படுத்திப் பாவனைப் படுத்தியே தமது பலவீனங்களை மறைத்து, பெண்களை தவறு செய்தவர்கள் போல எண்ண வைத்து மனரீதியாகத் தாக்கி தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளுகிறார்கள்.
இடையிலே தேநீர் தேவையென்றால் போய் போட்டுக் குடிப்பதுதானே. அதென்ன செருமல். உடனே அவளும் கணவனின் எண்ணமறிந்து செயற்பட வேண்டுமாம். தேநீர் போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறாள். கணவனென்ன கை கால் வழங்காத நோயாளியா?
சாதரணமாக நோக்கும் போது ஒரு தேநீர் போடுவது பெரிய வேலை இல்லைத்தான். அப்படியென்றால் ஆணே எழுந்து அதைச் செய்யலாம்தானே. எழுந்து போகவே ஆணுக்குப் பஞ்சி. சமைத்த குறையில் ஒரு பெண் இறைச்சி வெட்டிய கையைக் கழுவித் துடைத்து, தண்ணியை வைத்துக் கொதிக்கும் வரை காத்திருந்து.. தேநீர் போட்டு சோபா வரை வந்து கொடுத்துச் சென்று மீண்டும் சமையலைத் தொடர்வது வேலையால் களைத்து வந்த பெண்ணுக்குப் பெரிய வேலைதான்.
இருந்து கொண்டு வேலை சொல்லும் கணவன்மார்கள் இந்தக் காட்சியைப் பார்த்த பின்னாவது திருந்துவார்களோ இல்லையோ, தமக்குள்ளே தம்மை நினைத்துக் கண்டிப்பாக வெட்கப் படுவார்கள்.
சரி இவ்வளவுதான் என்றால் பரவாயில்லை. சமைத்த சாப்பாட்டைக் கோப்பையில் போட்டு வந்த போது கூட எழுந்து சென்று சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிடும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஏதோ இருதுருவங்கள் போல அவன் ஒரு பக்கம். அவள் இன்னொரு பக்கமாக இருந்து சாப்பிடுகிறார்கள். கண் பார்த்துக் கதை பேசி, மனம் விட்டுச் சிரித்து, உணவை ரசித்துச் சாப்பிடாமல், கண்களைத் தொலைக்காட்சிக்குள் புதைத்து விட்டு வாழ்க்கையை எங்கேயோ தொலைத்திருக்கிறான் அந்தக் கணவன். தனது வாழ்க்கையை மட்டுமா..? துணைவன் என்று நினைத்து வந்தவளுக்கு துணையாக நில்லாது அவளின் வாழ்வையுமல்லவா குழி தோண்டிப் புதைத்திருக்கிறான். கையைக் கழற்றிக் கொடுத்து விட முடியுமென்றால் கழுவுவதற்குக் கொடுத்து விட்டிருப்பான்.
சமைத்துத் தந்தாளே என்றொரு நன்றியுணர்வு துளியளவும் இல்லை. அவள் அதற்காகத்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இவனிடம் வந்து சேர்ந்திருக்கிறாள் என்பது போன்றதான அலட்சியம். கைகளைக் கழுவித் துடைக்கும் போது அவளைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட இல்லை.
அவள் அதன் பின்னும் உடைகளைத் தோய்க்கப் போட்டு, சமையலறையைத் துப்பரவாக்கி இனிப் போதும் என்ற எண்ணத்தோடு படுக்கையறைக்குள் நுழையும் போது அங்கு கட்டிலில் மட்டும் இவளுக்காகக் காத்திருக்கிறான்.
சேர்ந்து அவள் வேலையில் பங்கெடுத்திருந்திருந்தானேயானால் அவளே ஒரு எதிர்பார்ப்போடு படுக்கையறைக்குள் நுழைந்திருப்பாள்.
அவளும் அந்த வீட்டில் இருக்கிறாள் என்பதையே கண்டு கொள்ளாதவன் கட்டிலில் அவளுக்காகக் காத்திருந்து, அவளைக் கண்டதும் பல்லைக் காட்டுவது அருவருப்பின் உச்சமாகவே தெரிகிறது.
படத்தின் நாயகர்கள் சுரேசும், சுமதியும். முழுவதுமாகப் படத்தில் இடம் பெற்ற பாத்திரங்களும் இவர்கள் இருவருமே. இருவரின் நடிப்பும் அபாரம். படம் முடிந்த பினனும்; இது வெறும் படந்தானே என்று எண்ணி விட முடியாமல், சுரேசின் மேல் ஏற்பட்ட கோபமும் எரிச்சலும் மனத்திலிருந்து விலகாமல் அப்படியே நிற்கிறது. இது அந்த இரு பாத்திரங்களுக்கும் கிடைத்த வெற்றியே.
சுமதி எடுத்துக் கொண்ட கதை
என்னதான் மாற்றங்கள் உலகில் நிகழ்ந்தாலும், பெண் விடுதலை பற்றிய கோசங்கள் எப்படித்தான் எழுந்தாலும், பெண்களுக்கென்றே விதிக்கப் பட்ட சில எழுதாத சட்டங்களும், வகுக்கப்பட்ட கட்டாயக் கடமைகளும் இன்னும் அவர்கள் முன் குவிந்துதானிருக்கின்றன.. இவை பற்றிப் பேசுவதானால் நிறையவே பேசலாம். ஆனால் சுமதி ஒன்றுமே பேசாமல் பாத்திரங்களையே பேச வைத்து ஒரு அழகிய சோகமான கவிதை போல அதை நறுக்கென்று தந்துள்ளார். கண்டிப்பாகச் சுமதியைப் பாராட்டவே வேண்டும்.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது அந்தப் பெண் விரும்பித்தானே அந்த வேலைகளைச் செய்கிறாள் என்ற எண்ணம் சிலர் மனதில் ஏற்படலாம். விரும்புகிறாளோ இல்லையோ கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்றதான ஒரு நிலைப்பாடு இன்னும் மாறாமலேயே இருக்கிறது. முன்னர் வீட்டு வேலைகளுக்கு மட்டுமாய் இருந்தவர்கள், தற்போது வீட்டு வேலைகளுடன் வெளி வேலைகளையும் செய்கிறார்கள். சரியாகச் சொல்வதானால் இரட்டைச் சுமை பெண்களின் தலையில்.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது இப்படித்தான் எல்லா ஆண்களும் இருப்பார்களா? என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். இப்படித்தான் எல்லா ஆண்களும் இருப்பார்கள் என்றும் இல்லை. படத்தின் நாயகி போலத்தான் எல்லாப் பெண்களும் அசாத்தியப் பொறுமை காப்பார்கள் என்றும் இல்லை. ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் என்பது உண்மை. அதுவும் பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது மிக மிகக் கசப்பான உண்மை.
(இந்தப் படத்தை பார்க்கும் போது என்னுள் எழுந்த அத்தனை உணர்வுகளையும் இங்கு நான் தற்போது வைக்கவில்லை. முடியும் போது அவைகளையும் இங்கு தர முனைகிறேன்.)
சந்திரவதனா
யேர்மனி
19.9.2004
குறும்படம் பற்றிய ஏனைய விமர்சனங்களுக்கு.