Thursday, December 09, 2004

இளங் கலைஞர்களுக்கு ஒரு மடல்


எழுதியவர் கலைஞர் ஏ.ரகுநாதன்

தமிழாள் கூத்தவை
பாரிஸ்

மண்னின் மேல் மாறாத பற்றும் கலையின் மேல் காதலும் கொண்ட தமிழ் ஈழத்தின் அன்பு நெஞ்சங்களே!
இது உங்களுக்கு ஒரு மடல்... அழைப்பு மடல்...
அன்பு மடல்...
கலைத்துறையிலன் நானொரு வித்தகன் என்றோ அன்றி சாதனையாளன் என்றோ என்ற எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை. ஒரு சாதாரண கலை உபாசகன் என்ற ரீதியில் 1947ம் ஆண்டு முதல் நாடகத் துறையிலும் 1963ம் ஆண்டு முதல் திரைப்படத் துறையிலும் ஓரம் நின்றவன் என்ற உரிமையிலும், வயதும் எழுபதை நெருங்கி விட்டது நம் அடுத்த சந்ததிக்கு எம் அகனுபவத்தை முன்மொழிய வேண்டிய கடமைப்பாட்டிலும் இதனை வரைகின்றேன்.

இது உலகமெல்லாம் கால் பதித்து விட்ட நம்மவர்க்கான மடல். படித்து விட்ட மறந்து விடாமல் உங்கள் கால்களை இத்துறையில் எடுத்து வையுங்கள்.
முந்தாநாள் எங்கள் பாட்டன் நட்ட மாமரத்துக் கனியை அவன் ருசிக்கவில்லை. நாம்தான் புசிக்கின்றோம்.
எப்படி படம் செய்ய வேண்டு என்று சொல்ல எனக்குத் தகுதியில்லா விட்டாலும் எப்படி படம் செய்யக் கூடாதென்ற அனுபவத் துணிவுடன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய கடமைப்பாட்டுடன் இதை எழுகிதுறேன் கலை நெஞ்சங்களே.
1963ல் ஆரம்பிக்கப்பட்டது ஈழத்து தமிழ் சினிமா. அன்று வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பில் மட்டுமே நமது ஈழத் திரைப்படங்கள் திரையிடும் வாய்ப்பு நமக்கிருந்தது.
இன்று...
உலகெல்லாம் நமக்கென்று நம்மவர் பரந்து படர்ந்திருக்கிறார்கள். அந்த நம்மவரை நமக்கென்று, நம் தனித்துவத்துக் கென்று நம் படைப்புகளைத் தந்து எமக்காக வழிநடத்த வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு கலை நெஞ்சத்திற்கும் உண்டு.நம்மவர் கலைப்பசியை நாமே நிறைவேற்றி சுயமாக நமக்கென்றதொரு கலைத்தொழிலை உருவாக்குவோம்.
பயமோ மயக்கமோ இன்றி நமக்கான உணவை நாமே ஆக்கிக்கொள்வோம். இதில் அடுத்தவர் மேல் காழ்ப்போ பொறாமையோ வெறுப்போ கொஞ்சம்கூட இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
உலகில் இன்று சினிமாவின் எண்ணிக்கையில் அதிகமான படங்களைத தருவதில் முன்நிற்கும் இந்தியாவையும், உலகத்தின் மிகப் பிரமாண்டமான படங்களைத் தரும் அமெரிக்காவையும் விட இன்று உலகத்தில் மிகச் சிறந்த படஙகளைத் தருவது ஈரான்தான் என்ற உண்மையை உலகச் சினிமா வல்லுநர்கள் பிரமிப்போடு வழிமொழிகிறார்கள்.
கவர்ச்சிக் கோலங்கள் இல்லாத காத்திரமான சினிமாக்களை உலகிற்கு தந்து ஈரான் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது. ஈரான் கலைஞர்கள் போல் நாமும் நமக்கான சினிமாவை வடிவமைக்க வாருங்கள். அதற்கான நேரம் வந்துவி்ட்டது. 'தொட்ட எதனையும் துலங்கச் செய்யும் ஆற்றல் நமக்கிருக்கின்றது. சாதிக்கும் தைரியம் நமக்கிருக்கின்றது' என்றே உங்களை அழைக்கின்றேன். நம் அனுபவங்களை, இழப்புகளை புலம்பெயர்ந்ததால் உலகுடன் எமக்கேற்பட்ட நெருக்கத்தில் நாம் கற்ற நல்லவைகளை வெளிப்படுத்தனாலே நல்ல சினிமாக்கள் நம்முன் மலரும். முதலில் குறும்படங்களைத் தாருங்கள். காலம் அந்த குறும்படங்களை எங்கள் கலைக் குறியீடுகளாக மாற்றும். அவை முழுச் சினிமாக்களுக்கு முன்னோடியாக அமையும்.
நம்மிடையே எழுதத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நடிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது நாம் வாழும் நாட்டின் மொழியும் நமக்குத் தெரியும். சினிமாவைக் கண்டுபிடித்த ஐரோப்பாவில் சினிமாவை உலகமயப்படுத்திய அமெரிக்காவில் நாம் பரந்திருக்கிறோம். இங்கு திரைப்பட பயிற்சியை அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளலாம். களத்தில் இறங்குங்கள் ஐந்து வருடங்களில் அற்புதமான படைப்புகளை உங்களால் தரமுடியும். அதனை நம்மவர்கான தொழிலாகவும் உருவாக்க முடியும். எங்கள் கலையை கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தவும் முடியும்.
எனக்குத்தான் படம் செய்யத் தெரியும் என்ற பழைய தலைமுறையின் எண்ணங்களை மாற்றி ஆர்வமும் கற்பனை வளமும் கலைமேற் பற்றும் தேடலும் உள்ள ஒவ்வொரு இளைஞனாலும் இது முடியும் வாருங்கள்.
பேசிவிட்டுப் போகாமல் செயலில் இறஙகுங்கள். நமக்கான நுகர்வுச் சந்தை உருவாகிவிட்டது. அதனை மற்றவர்களிடம் இழந்து விடாமல் நமதாக்கி கொள்வோம்.
கலைப்பாதையில் நம் பயணத்தை தொடங்குவோம்.
நாளை உலகம் நமக்கு வசப்படும்.
என்றும்
அன்புடன்
ஏ.ரகுநாதன்.

நன்றி அப்பால் தமிழ்

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.