நிழல் யுத்தம்
(குறும்படம் பார்க்க படத்திலே சுட்டவும்)
ஆக்கம்:- அஜீவன்
வசனம்:- பாலகிருஷ்ணன்
நாடு:- சுவிஸ்
நேரம்:- 14:24 நிமிடங்கள்
புலம்பெயர் மண்ணில் வாழும் ஒரு கணவன் மனைவி இருவருக்கிடையிலான உறவு பற்றிய, இருவருக்கிடையில் நடைபெறுகின்ற நிழல் யுத்தம் பற்றிய கதை.
நிழல்யுத்தம் குறும்படம் எனது பார்வையில்... சந்திரவதனா செல்வகுமாரன்
சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை.
நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும் எம்மவர் ஒருவரைப் பார்த்ததும் மெல்லிய சோகத்தனம் மனத்தில் தோன்றத்தான் செய்தது.
ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் கதை சற்று வேறு கோணத்தில் திரும்பியது. ராதிகா சமைக்கும் விதமும், கறியை கையில் ஊற்றி சுவை பார்க்கும் விதமும் மிகவும் யதார்த்தமாகவும், ராதிகாவின் முகம் ஏதோ ஒன்றை இழந்த அதிருப்தியான தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தன.
குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு சிறு பொறியொன்றே போதும். இங்கு அது நண்பனின் வடிவில் பஞ்சாபியாக வந்திருந்தது. ஆனாலும் ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி, கறியை எரிய வி;டுமளவுக்கு பாரது}ரமானதாக இருக்காது.
அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது.
புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கு வருவதற்கான புரிதல் நிலைக்கே அவகாசம் இல்லாமல், அவர்களையும் தாண்டிய குடும்பச் சூழ்நிலைகளால் பணம் என்ற ஒன்றைத் தேடி வேலை வேலை என்று ஆண் திரியும் போது, ராஜவாழ்க்கை, காதல் கணவன்... என்ற கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வந்து
தனிமையே துணையாகி, அதனால் ஏற்படும் விரக்தியில் பெண் வாடிக் கொண்டிருப்பது.. புலத்தில் இன்று நேற்றல்ல. இது தொடர்கதையாய்.. தொடர்கிறது. அதன் ஒரு பதிவுதான் நிழல்யுத்தம்.
இந்தப் படம் பார்த்து ரசிப்பதற்கான வெறும் குறும்படமாக மட்டுமாக இல்லாமல், புலம்பெயர்ந்த குடும்பங்களில் தொடர்கதையாகும் நிழல்யுத்தங்களின் காரணங்களைக் கண்டு திருந்திக் கொள்ள ஏதுவான கருவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.
தம்மைத்தாமே புரிந்து கொள்ளாத.. திருத்திக் கொள்ளக் கூட முயலாத நிலையில் உள்ள தன்மைகள் கொண்ட பாத்திரங்களை இப் படத்தில் கண்டு கொள்ள முடிந்தது. இது பார்ப்பவர்கள் மனதில் சிந்தனையைத் து}ண்டி அவர்தம் பிழைகளை உணர வைக்குமென்றே நம்புகிறேன்.
உதாரணமாக பாலகிருஸ்ணன் களைத்துத்தான் வீடு திரும்புகிறார். இல்லை என்று சொல்வதற்கில்லை. அவருக்கு இந்த வாழ்க்கை சில வருடப் பழக்கமாகி விட்டது. ஆனால் அவர் மனைவி ராதிகாவோ சுற்றம், சூழலை விட்டு இப்போதான் வந்திருக்கிறாள். கணவனில் இருந்து தனிமை வரை அத்தனையும் புதிது. அவள் மனநிலையை உணர்ந்து கொள்ளும் தன்மையில் அவன் இல்லை.
தனியே பஞ்சாபி விடயத்தைப் பார்த்து விட்டு அவளைத் திட்ட முடியாது.
நான் மேலே குறிப்பிட்டது போல, ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி, கறியை எரிய வி;டுமளவுக்கு பாரது}ரமானதாக ஒரு போதும் இருக்காது.
அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. அதற்கான காரணம் எங்கே என்று தெரிய வேண்டும். அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வேறு சம்பவங்கள் அங்கு நடந்திருக்க வேண்டும். பாலகிருஸ்ணன் அதற்கான சரியான விளக்கங்களை அங்கு கொடுக்காதிருந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் கள்ளம் பிடிபட்டுப் போச்செண்டு.. என்ற வார்த்தைகளை அவள் கொட்டியிருக்கத் தேவையில்லை.
வேலையிடத்தில் அவன் நாய் மாதிரி... நீ இங்கே... இவை பல ஆண்களின் வாயில் வரும் வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் எந்தளவு து}ரத்துக்கு ஒரு மனைவியைப் பாதிக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.
நண்பன் வீடு மாற உதவி செய்தவன் மனைவி காத்திருப்பாள் என்பதை எண்ணியிருந்தால் ஒரு தடவை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது நிலையை அவளுக்கு விளக்கியிருக்கலாம். தன்னந்தனியான அந்தக் காத்திருப்பு என்பது அந்தப் படத்தில் காட்டியதையும் விட- மனதில் அதி விரக்தியையும் வேதனையையும் வெறுப்பையும் கொடுக்கக் கூடியது. போகும் போதாவது இன்று நண்பனுக்கு உதவி செய்ய வேண்டிய பிரச்சனை ஒன்று உள்ளது. நான் வரத் தாமதமாகலாம் என்ற முன்னறிவிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கலாம். எனக்கு மட்டுந்தான் பிரச்சனை. நீ இவைகளை அனுசரி என்பது போலல்லவா பாலகிருஸ்ணனின் செயல்கள் அமைந்துள்ளன.
இப் படத்தின் மூலம் ஆண்கள் இந்தத் தவறுகளை உணர்ந்து திருந்திக் கொள்வார்களேயானால் அதற்கான நன்றி அஜீவனையே சென்றடையும்.
மற்றொரு கோணத்தில் நின்று பார்த்தால்.. இவைகளை மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
மொத்தத்தில் இப்படம் சமூகத்துக்கான ஒரு நல்ல படைப்பு.
ஒரு பெரிய பிரச்சனை சில நிமிடங்களுக்குள் மிகவும் யதார்த்தமாக முன் வைக்கப் பட்டுள்ளது. படத்தில் தேவையற்ற விரிசல்களோ, ஒடிசல்களோ ஏற்படாதவாறு கன கச்சிதமாக வெட்டல்களும், ஒட்டல்களும் நடந்துள்ளது.
இது இந்தத் துறையில் அஜீவனுக்குள்ள அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.
காரிலே போகும் போது இப்படிச் சண்டை போடுகிறார்களே..! ராதிகா இந்தக் கட்டத்தில் பொறுமை காக்காலாமே..! ஒரு பெரிய விபத்துக்கு இது வழியாகலாமே..! என மனசு அந்தரப் படுகையில் விபத்து நடப்பதாகக் கனவு-
நன்றாகவே அமைந்துள்ளது.
இன்னும் இப்படத்துக்குள் நிறையவே தேடலாம். புரியலாம்.
எனது நேரம் கருதி தற்போதைக்கு இத்துடன் நிறைக்கிறேன்.
இப் படம் பற்றிய முல்லையின் பார்வையும், எனது பார்வையும் பல இடங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றன போலவே எனக்குத் தோன்றுகின்றது.
ஆனாலும் அவைகளை விமர்சனமாக முன் வைப்பதில் முல்லையிலிருந்து நான் சற்று வேறு பட்டே நிற்கிறேன்.
அதே நேரம் முல்லை எனது பார்வையையும் தாண்டி வேறு சில விடயங்களையும் ஊன்றிப் பார்த்திருக்கின்றார் என்பதையும் என்னால் உணர முடிகிறது.
(நன்றி :யாழ் களம்)
0 Comments:
Post a Comment
<< Home